For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாம்பன் புதிய பாலத்தில் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நிறைவு.. ஊழியர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்..

07:57 AM Aug 05, 2024 IST | Web Editor
பாம்பன் புதிய பாலத்தில் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நிறைவு   ஊழியர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்
Advertisement

பாம்பன் புதிய செங்குத்து ரயில் தூக்கு பாலத்தில் தண்டவாளம் அமைக்கும் பணி நிறைவு பெற்றதையடுத்து, ரயிலை இயக்கி சோதனை செய்யப்பட்டது. இதனை ரயில்வே ஊழியர்கள் தேங்காய் உடைத்து, கேக் வெட்டி கொண்டாடினர்.

Advertisement

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவை தமிழ்நாட்டுடன் இணைப்பதற்கு பாம்பன் சாலை மற்றும் ரயில் பாலம் முக்கிய பங்காற்றி வருகிறது. பாம்பன் பழைய ரயில் பாலத்தில் மையப் பகுதியில் அமைந்திருந்த ரயில் தூக்குப்பாலம் நூற்றாண்டைக் கடந்து உறுதித் தன்மை இழந்ததால் பழைய ரயில் பாலம் அருகே ரூ.550 கோடி மதிப்பீட்டில் புதிய ரயில் பாலம் கட்ட இந்திய ரயில்வே திட்டமிட்டு கடந்த 2018-ம் ஆண்டு கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கடலில் கட்டப்பட்டு வரும் புதிய ரயில் பால பணிகள் முழுமையாக நிறைவடைய உள்ள நிலையில், அதன் மையப்பகுதியில் அமைந்துள்ள சுமார் 500 டன் எடை கொண்ட செங்குத்து இரும்பு தூக்கு பாலத்தில் தண்டவாளங்கள் அமைக்கும் பணி நடைபெற்றது. தண்டவாளங்கள் அமைத்த பின் முதல் முறையாக பாம்பன் செங்குத்து தூக்கு பாலம் வழியாக ரயில் எஞ்சினை இயக்கி ரயில்வே துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

ரயில் என்ஜின் செங்குத்து தூக்கு பாலத்தை கடந்து பாம்பன் ரயில் நிலையம் வரை சென்றதால் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தது. புதிய பாம்பன் ரயில் தூக்கு பாலத்திற்குள் ரயில் என்ஜினை இயக்குவதற்கு முன் கட்டுமான ஊழியர்கள் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் தேங்காய் உடைத்து, கேக் கொடுத்து தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டதுடன், செங்குத்து பாலத்தைக் ரயில் எஞ்சின் கடந்து செல்லும் போது 'பாரத் மாதா கி ஜெய்' என்று கோஷங்களை எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

முன்னதாக மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து பாம்பன் புதிய பாலம் வரை சரக்கு ரயில் இயக்கப்பட்டு சோதனை நடைபெற்ற நிலையில், இன்று முதல் முறையாக புதிய ரயில் பாலத்தில் முழுமையாக ரயில் எஞ்சினை மட்டும் இயக்கி வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடந்து முடிந்து. மேலும், நாளை மறுநாள் (ஆக. 7) சரக்கு ரயிலை பாம்பன் புதிய ரயில் பாலத்தில் முழுமையாக இயக்கி சோதனை நடத்த இருப்பதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சோதனை வெற்றிகரமாக முடிந்ததால் விரைவில் பாம்பன் பாலத்தில் ரயில் சேவை தொடங்கவுள்ளது. இதனால் பாம்பன், ராமேஸ்வரம் பகுதி பொது மக்கள், மீனவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags :
Advertisement