திருவள்ளூர் அருகே ரயில் விபத்து எதிரொலி! சென்னை சென்ட்ரல் செல்லாமல் மாற்று வழியில் இயக்கப்படும் ரயில்கள்!
திருவள்ளூர் அருகே ரயில் விபத்து நடந்ததால் சென்னை சென்ட்ரல் செல்லாமல் மாற்று வழியில் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே நேற்று (11.10.2024) இரவு ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு மீட்புப்பணிகள் நடைபெறும் நிலையில், மாற்றுப்பாதையில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. மைசூரிலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் (12578) கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் மீது மோதி தடம் புரண்டது.
விபத்து எதிரொலியாக, தன்பாத் - ஆலப்புழா விரைவு ரயில் (13351) ரேனிகுண்டா, மேலப்பாளையம், காட்பாடி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. இந்த ரயில் நாயுடுப்பேட்டா, சூலூருப்பேட்டா, சென்னை செண்ட்ரல் மற்றும் அரக்கோணம் ரயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படவில்லை. அதேபோல, ஜபல்பூர் - மதுரை அதிவிரைவு ரயில் (02122) ரேனிகுண்டா, மேலப்பாளையம், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரயில் சென்னை எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்கள் வழியாக செல்லாது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.