மனைவியை காப்பாற்ற விரைந்த கணவரும் உயிரிழந்த சோகம்!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பூனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த நாராயணப்பா (47) மற்றும் அவரது மனைவி ரேணுகா (46) ஆகியோர் வசித்து வந்தனர். இன்று காலை ரேணுகா, துணிகளைத் துவைத்துவிட்டு வீட்டின் மாடிக்கு துணிகளை உலர வைக்கச் சென்றுள்ளார்.
இந்நிலையில் எதிர்பாராதவிதமாக, மாடியில் இருந்த கம்பியில் மின்சாரம் பாய்ந்ததில் ரேணுகா மீது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிகிறது.
மனைவி ரேணுகா மின்சாரம் தாக்கி உயிரிழந்ததைக் கண்ட கணவர் நாராயணப்பா, அவரை காப்பாற்றும் நோக்கில் உடனடியாக விரைந்துள்ளார். துரதிர்ஷ்டவசமாக, அவரும் அதே மின் கம்பியிலிருந்து மின்சாரம் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், மத்திகிரி போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மின்சாரம் தாக்கி உயிரிழந்த கணவன், மனைவி இருவரின் உடல்களையும் மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து எப்படி நிகழ்ந்தது, மின் கம்பி அறுந்து விழுந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின் விபத்துக்கான காரணம் மற்றும் மின் கம்பியின் பராமரிப்பு நிலை குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இச்சம்பவம் பூனப்பள்ளி கிராம மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது