இலங்கையில் கோர விபத்து - அதிகாலை பேருந்து கவிழ்ந்ததில் 21 பேர் உயிரிழப்பு!
இலங்கையில் கதிர்காமம் பகுதியில் இருந்து குருநாகல் நோக்கி பேருந்து ஒன்று சென்றுள்ளது. அப்போது நுவரெலியா- கம்பளை மலைப்பகுதி சாலையில் சென்று கொண்டிருந்த போது பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பேருந்தில் சுமார் 75 பயணிகள் இருந்ததாகவும், அனைவரும் புத்த மத துறவிகள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில், உயிரிழந்த 21 பேரின் உடல்களும் கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் கொத்மலை பொது வைத்தியசாலை, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை, கம்பளை மற்றும் நாவலப்பிட்டி ஆகிய வைத்தியசாலைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து சபாநாயகர் மற்றும் போக்குவரத்து பிரதி அமைச்சர் நேரில் வந்து விசாரணைக மேற்கொண்டுள்ளனர்.