For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நீச்சல் குளத்தில் நடந்த விபரீதம்... நீரில் மூழ்கி சிறுவன் பலி!

11:29 AM Aug 05, 2024 IST | Web Editor
நீச்சல் குளத்தில் நடந்த விபரீதம்    நீரில் மூழ்கி சிறுவன் பலி
Advertisement

சென்னை கொளத்தூரில் நீச்சல் பயிற்சி மேற்கொண்ட 10 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

சென்னை கொளத்தூரை அடுத்த விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினகுமார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை பூர்வீகமாகக் கொண்ட இவர் தற்போது சென்னையில் குடும்பத்துடன் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கீர்த்தி சபரீஸ்கர் (10) என்ற மகன் இருந்தான். 10 வயதான இவர் சிறப்பு குழந்தையாவார்.

இந்த சிறுவனுக்கு மருத்துவர்களின் ஆலோசனைப்படி சென்னை கொளத்தூரில் உள்ள BLUE SEAL என்ற நீச்சல் குள பயிற்சி மையத்தில் வாரத்தில் இரண்டு நாட்கள் நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.  இந்த நிலையில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் வழக்கம் போல் சிறுவனின் தந்தையும் தாயும் சிறுவனை அழைத்துக் கொண்டு நீச்சல் பயிற்சி மையத்திற்கு சென்றனர்.

அங்கு பயிற்சியாளர் இந்த சிறுவனுக்கு நீச்சல் பயிற்சி அளித்து  வந்துள்ளார். இதற்கிடையே சிறுவனின் தந்தை நீச்சல் பயிற்சி மையத்தின் அருகில் காரில் அமர்ந்து கொண்டு தனது லேப்டாப்பில் அலுவலக பணிகளை செய்து வந்துள்ளார்.  சிறுவனின் தாய் ராணி நீச்சல் பயிற்சி மேற்கொண்ட தனது பிள்ளையை அருகில் இருந்து கவனித்து வந்ததாக கூறப்படுகிறது.

பயிற்சியாளர் சிறுவனுக்கு நீச்சல் பயிற்சி அளித்துக் கொண்டிருந்த நிலையில் ஒரு கட்டத்தில் சிறுவன் நீரில் தத்தளித்துக் கொண்டு மூழ்கியபடி இருந்ததைக் கண்டு சிறுவனின் தாய் அதிர்ச்சி அடைந்தார்.  உடனே சிறுவனின் தாயார் மகன் நீரில் மூழ்குகிறான் என்றும் என்னவென்று பார்க்கும் படியும் கூறியுள்ளார்.  அதற்கு நீச்சல் பயிற்சியாளர், "அப்படி இருந்தால் தான் நீச்சல் கற்றுக் கொள்ள முடியும். நீங்கள் சற்று அமைதியாக இருங்கள் அவர் தானாக நீச்சல் பழகி மேலே வருவார்" எனக் கூறியதாக சொல்லப்படுகிறது.ஒரு கட்டத்தில் சிறுவன் கீர்த்தி சபரீஸ்கர் நீச்சல் குளத்தில் பேச்சு மூச்சு இல்லாமல் மிதந்தபடி இருந்துள்ளார்.  இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தாயார் ராணி அலறி அடித்தபடி ஓடி வந்து காரில் அலுவலக பணிகளை மேற்கொண்டு இருந்த தனது கணவரிடம் நடந்த விவரங்களை கூறியுள்ளார்.  இதனையடுத்து சிறுவனின் தந்தையும் தாயும் சிறுவனை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அந்த சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  தொடர்ந்து சென்னை கொளத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொளத்தூர் போலீசார் உயிரிழந்த சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் நீச்சல் பயிற்சி மையத்தின் உரிமையாளர் காட்வின் மற்றும் பயிற்சியாளர் அபிலாஷ் ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றர்.

Tags :
Advertisement