ஆன்லைன் விளையாட்டால் நேர்ந்த சோகம் - குழந்தைகளை தவிக்க விட்டு சென்ற தாய்!
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சிஎஸ்ஐ சர்ச் தெருவை சேர்ந்தவர் அருண்பாண்டியன் (30). ஆலங்குளம் தையல் நாயகி காய்கறி மார்க்கெட்டில் வேலை பார்த்து வருகின்றார். இவரது மனைவி ஸ்டெல்லா எஸ்தர் (27). இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகின்றன. பிரதிக்ஷா (5), தேசிகா (6), தர்சிகா (2) ஆகிய பெண் குழந்தைகளும், 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்டெல்லா எஸ்தர் தனது கணவரிடம் ஸ்மார்ட் போன் வேண்டும் என்று கேட்டுள்ளார். அருண்பாண்டியன் மனைவி மீது உள்ள பாசத்தில் புதியதாக ஸ்மார்ட் போன் வாங்கி கொடுத்துள்ளார். அடிக்கடி செல்போன் பயன்படுத்தி வந்த ஸ்டெல்லா எஸ்தர், செல்போன் மூலம் ஆன்லைன் விளையாட்டில் நுழைந்துள்ளார்.
இந்த நிலையில் அவா் ஆன்லைன் விளையாட்டில் ரூபாய் 2 லட்சம் வரை இழந்தாக கூறப்படுகிறது. குழந்தைகளின் எதிர்காலத்திற்காக கஷ்டப்பட்டு சேமித்து வைத்த பணத்தை ஆன்லைன் விளையாட்டில் மனைவி இழந்தது கணவர் அருண்பாண்டியனுக்கு தெரியவந்தது.
இதனால் மனம் உடைந்து போன ஸ்டெல்லா எஸ்தர் ஊருக்கு வெளியே உள்ள ஒரு மாட்டு தொழுவம் அருகே வைத்து பூச்சி மருந்தை குடித்துள்ளார். இதையறிந்ததும் அந்த வழியாக சென்றவர்கள் ஸ்டெல்லாவின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஸ்டெல்லா உயிரிழந்தாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆர்டிஓ விசாரணையும் நடைபெற்று வருகின்றது. ஆன்லைன் விளையாட்டால் லட்சகணக்கில் பணத்தை இழந்த பெண் 4 குழந்தைகளையும் தவிக்க விட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் விளையாட்டு ஆபத்தானது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும் இது போன்ற சம்பவம் பரவலாக நடைபெற்று வருகிறது. தமிழக அரசு ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட இந்த குழந்தைகளுக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.