கோயில் திருவிழாவில் சோகம்... பட்டாசு வெடித்து சிதறி 4 பேர் உயிரிழப்பு!
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி திரௌபதி அம்மன் கோயில் திருவிழா கடந்த 15 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. தொடர்ந்து நேற்று சுவாமி திருக்கல்யாணத்திற்காக கஞ்சநாயக்கன்பட்டி அருகே உள்ள பூசாரிப்பட்டி பகுதியில் இருந்து, கோயிலுக்கு சுவாமி திருமண சீர்வரிசை மேளதாளங்கள் முழங்க எடுத்து வரப்பட்டது.
அப்போது பழைய சினிமா கொட்டாய் என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் திருவிழாவிற்காக பட்டாசை எடுத்து வந்தனர். வாகனத்தை இடையில் நிறுத்தி கடையில் பொருட்கள் வாங்கும் போது, கடைக்கு அருகே பழைய குப்பைகளை எரித்த நெருப்பு திடீரென இருசக்கர வாகனத்தில் இருந்த பட்டாசு மேல் பட்டத்தில், பைக்கில் இருந்த பட்டாசு வெடித்து சிதறியது.
இதில் கடையின் முன்பிருந்த கூரை சேதமானது. மேலும் சம்பவ இடத்திலேயே கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் 29, குருவாளியூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் கார்த்திக் 11, அதே பகுதியைச் சேர்ந்த சேட்டு என்பவரது மகன் தமிழ்ச்செல்வன் 11 என மூன்று பேர் உடல் சிதறி பலியாகினர்.
இதில் படுகாயம் அடைந்த கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகன் லோகேஷை (23),அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஓமலூர் டிஎஸ்பி சஞ்சீவிகுமார் மற்றும் தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையை தொடங்கினர்.
தொடர்ந்து காடையாம்பட்டி தீயணைப்பு துறையினர் சேதம் அடைந்த வீடுகள் மற்றும் இரண்டு இருசக்கர வாகனம் ஆகியவைகளை தண்ணீரை கொண்டு அணைத்தனர். சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கௌதம் கோயல் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி லோகேஷும் பரிதாபமாக உயிரிழந்தார். கோயில் திருவிழாவின் போது பட்டாசு வெடித்து நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.