சேதமடைந்த தரைப்பாலம் - போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் கிராம மக்கள் அவதி!
கன்னியாகுமரி அருகே புறாவிளை பகுதியில் வரும் கனரக லாரிகளால் தரைபாலம் சேதமடைந்து, ஒரு மாத காலமாக பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், கிராம மக்கள் நான்கு கிலோமீட்டர் நடந்து அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம், காளிகேசம் வன பகுதியில் இருந்து முதிர்ந்த ரப்பர்
மரங்களை அளவிற்கு அதிகமாக ஏற்றி வரும் கனரக லாரிகளால், காளிகேசம்
-அன்புநகர் வன சாலை பாரம் தாங்காமல் சேதமடைந்து வருகின்றன. இதனால் மணலோடை - புறாவிளை இடையே உள்ள தரை பாலம் முற்றிலும் சேதமடைந்ததால்
குலசேகரம் பகுதியில் இருந்து புறாவிளை மலை கிராமத்திற்கு செல்லும் அரசு
பேருந்து போக்குவரத்து ஒரு மாத காலமாக நிறுத்தபட்டன.
இதனால் மணலோடை பகுதியில் இருந்து நகர் பகுதிக்கு சுமார் நான்கு கிலோமீட்டர் நடந்து வந்து அத்தியாவசிய பொருட்கள் வாங்கி சென்று அன்றாட தேவைகளை பழங்குடி
மக்கள் நிவர்த்தி செய்து வருகின்றனர்.இதனால் பள்ளி மாணவ, மாணவிகளும் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனை தவிர்க்க அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் , மணலோடை - புறாவிளை இடையே உள்ள தரை பாலத்தை அகர்த்திவிட்டு உயர் மட்ட பாலம் அமைக்க வேண்டும் எனவும் நியூஸ் 7 தமிழ் மூலம் பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.