போக்குவரத்து நெரிசலால் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 5 கி.மீ தொலைவிற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊருக்கு படையெடுக்கும் பொதுமக்களால் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் சுங்கசாவடியில் 5 கி.மீ தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
பண்டிகை நாட்களன்றும், தொடர் விடுமுறைகளின் போதும் சென்னையில் வாழும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதற்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பொங்கலுக்கு நாளை ஒருநாளே உள்ள நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தங்கி வேலை செய்யும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.
இதனால், சென்னையின் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, ஓசூர், தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை போன்ற ஊர்களுக்கு
செல்லும் பொதுமக்கள் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்வதால், சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் சுங்கசாவடியில் வாகனங்கள் 5 கி.மீ தொலைவிற்கு அணிவகுத்து நிற்கின்றன.
இதனால், சுங்க சாவடி ஊழியர்கள் திணறி வருவதோடு இந்த சுங்க சாவடியை கடக்க ஒரு
மணி நேரத்திற்கு மேலாக வாகனங்கள் காத்திருந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டு
வருகிறது.