"என்.எல்.சி தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட கூடாது; தற்போதைய நிலையே தொடர வேண்டும்!" - உயர்நீதிமன்றம் உத்தரவு
என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும். தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போரட்டத்தில் ஈடுபட கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பணி நிரந்தரம் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை எதிர்த்து என்.எல்.சி நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில் குமார் முன்பு கடந்த 14.08.2024 அன்று விசாரணைக்கு வந்த போது என்.எல்.சி. தரப்பில், "இந்த விவகாரம் தொழிலாளர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இரு தரப்புக்கும் இடையில் சமரச பேச்சுவார்த்தையும் நிலுவையில் உள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது. தொழிற்சங்க தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.சங்கரன், 20 ஆண்டுகளுக்கு மேலாக பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிர்வாகம் நிறைவேற்றவில்லை. உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் நிர்வாகம் அதனை பின்பற்றவில்லை.
சுமார் 13 ஆயிரம் பணியாளர்கள் தினக்கூலி அடிப்படையில் உள்ளனர். வேலைநிறுத்தம் என்பது அடிப்படை உரிமை. இந்த போரட்டத்தில் யாரையும் கட்டாயபடுத்தவில்லை" என தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதி 17.08.2024 (இன்று) வேலைநிறுத்த போராட்டம் நடத்த கூடாது என தொழில் சங்கத்தினருக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.
இந்நிலையில் ஆக.14-ஆம் தேதிக்கு பிறகு நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதி, "என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும். தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போரட்டத்தில் ஈடுபட கூடாது. என்.எல்.சி நிறுவனம் வேலை நிறுத்த நோட்டீஸ் தொடர்பாக தொழிலாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது. என்.எல்.சி நிறுவனத்திற்கு உரிய பாதுகாப்பை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும்" என உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.