குடியரசு தின விழா அன்று நாடு முழுவதும் டிராக்டர் பேரணி - விவசாயிகள் அமைப்பு அழைப்பு!
குடியரசுத் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பிரமாண்டமான டிராக்டர் பேரணிக்கு விவசாயிகள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
வருகிற ஜன 26 அன்று குடியரசு தினம் நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்று நடைபெறும் முதல் குடியரசு விழா என்பதால் சர்வதேச தலைவர்கள் குடியரசு தின விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் குடியரசு தினத்தன்று சம்யுக்த் கிசான் மோர்ச்சா எனும் விவசாயிகளுக்கான அமைப்பு நாடு முழுவதும் டிராக்டர் பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளது, மேலும், நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கோரியுள்ளது.
விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி 48 நாள்களாக காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கும் விவசாயிகள் சங்கத் தலைவர் ஜெக்ஜித் சிங் தால்லேவாலின் உடல்நிலை குறித்து அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில் எஸ்கேஎம் அமைப்பின் இந்த அழைப்பு வந்துள்ளது.
வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளுக்காக கடந்த ஆண்டு நவ. 26 முதல் பஞ்சாப் மற்றும் ஹரியாணா இடையேயான கானௌரி எல்லைப் பகுதியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.