ஒரே நாளில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் - உதகையில் கடும் போக்குவரத்து நெரிசல்!
உதகையில் ஒரே நாளில் குவிந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டு தோறும் கோடை சீசனை அனுபவிக்க தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்வது வழக்கம் .இந்த நிலையில் தமிழ்நாடு, கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களிலும்
மக்களவைத் தேர்தல் முடிவடைந்துள்ளது.
மேலும் பள்ளி மாணவர்களுக்கும் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. அதனுடன் சமவெளி பகுதிகளில் கடும் வெயில் நிலவி வருகிறது. இதன் காரணமாக தற்போது உதகைக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் தங்களின் சொந்த வாகனங்களிலும், சுற்றுலா பேருந்துகளிலும் சென்று வருகின்றனர்.
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
சுந்தரவடிவேலின் அறிவுறுத்தலின் படி, பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள்
செய்யப்பட்டு உள்ளன. இதனிடையே கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகளின்
எண்ணிக்கை குறைந்த அளவில் காணப்பட்டது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்தனர்.
இதனால் உதகை நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளான எச்.பி.எப், சேரிங்கிராஸ்,
லவ்டேல் ஜங்சன் உள்ளிட்ட சமவெளிப் பகுதிகளுக்கு செல்ல கூடிய சாலைகளிலும்,
தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா சிகரம் செல்லும் சாலை, படகு இல்லம் செல்லும்
சாலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் சுற்றுலா பயணிகள் தாங்கள் திட்டமிட்டப்படி சுற்றுலா ஸ்தலங்களுக்கு
செல்ல முடியாத நிலை ஏற்பட்டு பல மணி நேரம் வாகனங்களிலேயே காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சுற்றுலா பயணிகளில் வருகை அதிகரித்து கொண்டே இருப்பதால் முக்கிய சாலை வழி சந்திப்புகள் அனைத்திலும் கடும்
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.