கோடை விடுமுறையை முன்னிட்டு கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
கோடை விடுமுறையை முன்னிட்டு, கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள கன்னியாகுமரி உலகப் புகழ்பெற்ற சர்வதேச சுற்றுலா நகரமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் சீசன் காலங்களில் மட்டும் வழக்கத்தைவிட அதிகமான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்குப் படையெடுத்து வந்த வண்ணமாக இருப்பார்கள்.
இந்த நிலையில், கோடை விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு கன்னியாகுமரியில் ஏரானமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் குழந்தைகளுடன் சூரிய உதயத்தை காண குவிந்தனர்.
அவர்கள் இதற்காக அமைக்கப்பட்ட கேலரியில் அமர்ந்து சூரிய உதயத்தை காண ஆவலுடன் காத்திருந்தனர். தொடர்ந்து, கடலின் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு மூலம் செல்ல பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் மக்கள் கூடும் இடங்களில் குடிநீர் வசதி கூடுதல், கழிப்பிட வசதிகள் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.