வெண்பனி போல் ஆர்ப்பரித்து கொட்டும் ஆணைவாரி நீர்வீழ்ச்சி: குவிந்த சுற்றுலா பயணிகள்!
ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் விடுமுறை நாளையொட்டி ஆத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முட்டல் கிராமத்தையொட்டி கல்வராயன்மலை தொடர்ச்சியில் முட்டல் ஏரி மற்றும் நீர்வீழ்ச்சி உள்ளது. இதை வனத்துறையினர் சுற்றுலா தலமாக பராமரித்து வருகின்றனர். நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்கும் வசதி, படகு சவாரி மற்றும் வனப்பகுதியில் பொழுது போக்கும் வகையில் குடில், பூங்கா, மற்றும் சிறுவர்கள் விளையாட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
விடுமுறை நாட்களில் ஆத்தூர் மட்டுமின்றி கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சேலம், விழுப்புரம், பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். இந்நிலையில், வார விடுமுறை நாளான இன்று (நவ.25) ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் குளிக்கவும் படகு சவாரி செய்யவும் பூங்காவில் குவிந்தனர்.
இதனிடையே நீர்வீழ்ச்சியில் வெண்பனி போல் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து உற்சாகமடைந்தனர். மேலும், படகு சவ்வாரி செய்தும், பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு காளை, யானை, மான் உள்ளிட்ட சிலைகளுடன் செல்பி எடுத்தும் ராட்டினம் சுற்றியும் மகிழ்ந்தனர்,