விடுமுறையை முன்னிட்டு ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
புத்தாண்டு மற்றும் அரையாண்டு விடுமுறையை முன்னிட்டு ஒகேனக்கலில் அதிக அளவில்
சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான ஒகேனக்கலில் இன்று(ஜன. 01) விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். புத்தாண்டு விடுமுறை மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு அரையாண்டு விடுமுறை ஆகியவற்றின் காரணமாக குடும்பம் குடும்பமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலில் குவிந்துள்ளனர். தர்மபுரி மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல், அண்டை மாவட்டங்களில் இருந்தும், மேலும் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவின் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலில் குவிந்துள்ளனர்.
ஒகேனக்கலில் திரண்டுள்ள சுற்றுலா பயணிகள், ஆயில் மசாஜ் செய்து கொண்டும், பரிசல் பயணம் மேற்கொண்டும், ஒகேனக்கல் இயற்கை அழகை ரசித்து வருகின்றனர். மேலும் பிரதான அருவிகளில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளை நம்பியுள்ள ஒகேனக்கல் பரிசில் ஓட்டிகள், மீனவர்கள், சமையலர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதன் காரணமாக, இருபதுக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.