குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் - இரண்டாவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிப்பதற்கு இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் மற்றும் அருவிகளில் தண்ணீரானது ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.
குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றாலம் மெயின் அருவியில் அபாய வளைவைத் தாண்டி தண்ணீரானது கொட்டி வருகிறது.
இதையும் படியுங்கள் : புதுமண தம்பதி வெட்டிக் கொலை - ஒருவர் கைது; குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு!
மேலும், அங்கு காட்டாற்று வெள்ளம் ஏற்பட்ட நிலையில், குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க நேற்று தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து வெள்ளத்தின் தீவிரம் குறையாமல் இருப்பதால் இரண்டாவது நாளாக அங்குள்ள அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.