மோடியின் அமைச்சரவையில் டாப் பணக்கார எம்.பி. - ஒதுக்கப்பட்ட துறை என்ன தெரியுமா?
மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற மிகப்பெரிய பணக்காரரான தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளர் பெம்மசானி சந்திரசேகர் பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இடம் பிடித்தார். அவருக்கு ஒதுக்கப்பட்ட துறை குறித்து காணலாம்.
நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று (09.06.2024) நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமராகப் பதவியேற்கும் மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கேபினட் அமைச்சர்களும், தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்கள், மற்றும் இணையமைச்சர்கள் பதவியேற்றனர். இதன் மூலம் பிரதமர் மோடி தலைமையில் 72 பேர் கொண்ட அமைச்சர்கள் பதவி ஏற்றனர். அதில் 30 கேபினட் அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 5 இணையமைச்சர்கள் மற்றும் 36 இணையமைச்சர்கள் பதவி ஏற்றனர்.
இந்நிலையில் மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. நிதி, வெளியுறவு, பாதுகாப்பு மற்றும் உள்துறை ஆகிய 4 முக்கிய அமைச்சகங்களை பாஜக தன்னிடமே வைத்துக்கொண்டுள்ளது. அமித் ஷா உள்துறை அமைச்சகத்தையும், ராஜ்நாத் சிங் பாதுகாப்பு அமைச்சகத்தையும், நிர்மலா சீதாராமன் நிதியமைச்சகத்தையும், எஸ்.ஜெய்சங்கர் வெளியுறவுத் துறையையும் தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.
குறிப்பாக, ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சியும் பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் அதிக இடங்களில் வென்றுள்ளனர். தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பெம்மசாணி சந்திரசேகர் மற்றும் ராம் மோகன் நாயுடு ஆகிய இருவரும் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்று உள்ளனர். ராம்மோகன் நாயுடுவுக்கு மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், பெம்மசாணி சந்திரசேகர்க்கு ஊரக வளர்ச்சி, தகவல் தொடர்புத் துறை இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.
மக்களவைத் தேர்தலில் குண்டூர் மக்களவைத் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு 3,44,695 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார் பெம்மசானி சந்திரசேகர்.