இஸ்ரேலிய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி கொல்லப்பட்டார் - வெள்ளை மாளிகை!
இஸ்ரேலிய தாக்குதலில் ஹமாஸுன் முக்கிய தளபதிகளில் ஒருவர் கொள்ளப்பட்டதாக அமெரிக்க வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றது. இதனிடையே போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என தெரிவித்துள்ளார். 240 பணய கைதிகளில் 134 பேர் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளனர். எனினும், அவர்களில் 31 பேர் உயிரிழந்து விட்டனர் என்று தகவல் தெரிவிக்கின்றது.
ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியது குறிப்பிடத்தக்கது. இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் காசா மற்றும் அதற்கடுத்து, 2-வது பெரிய நகரான கான் யூனிஸ் பகுதிகள் மீது நேற்று முன்தினம் (மார்ச் 17) தாக்குதல் தொடுத்தன. இஸ்ரேலின் ஜெட் விமானங்கள், ஹிஜ்புல்லா கண்காணிப்பு நிலைகள் மீதும் தெற்கு லெபனான் பகுதியிலும் தாக்குதல்களை நடத்தின. இதில், துப்பாக்கி, பீரங்கி குண்டுகள் மற்றும் வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டன என தெரிவிக்கப்பட்டது.
இதில் ஒரு தாக்குதலில், படைகளுக்கு அடுத்து செயல்பட்டு கொண்டிருந்த பயங்கரவாதிகளை அடையாளம் கண்ட வீரர்கள், அவர்களை இலக்காக கொண்டு வான்வழி தாக்குதல் ஒன்றை நடத்தினர். இதில், பயங்கரவாதிகள் 4 பேர் கொல்லப்பட்டனர். மற்றொரு சம்பவத்தில், ஹமாஸ் வளாகத்திற்குள் நுழைந்த பயங்கரவாதிகள் 3 பேரை இஸ்ரேல் தரை படைகள் அடையாளம் கண்டதும், இஸ்ரேலின் விமானம் தாக்குதல் நடத்தி அவர்களை அழித்தது. ஒரு சில நிமிடங்களில், மற்றொரு ஹமாஸ் வளாகத்தில் இருந்து வெளியே வந்த பயங்கரவாதியும் வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டார்.
கான் யூனிஸ் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மொத்தத்தில், காசா முனை பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 18 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என இஸ்ரேல் தெரிவித்தது.
இந்நிலையில், கடந்த வாரம் ஹமாஸின் முக்கிய தளபதிகளுள் ஒருவரை இஸ்ரேல் விமானத் தாக்குதலில் கொன்றதாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவர் கூறியதாவது,
“ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. அவர்கள் கணிசமான எண்ணிக்கையிலான ஹமாஸ் பட்டாலியன்கள், மூத்த தளபதிகள் உட்பட ஆயிரக்கணக்கான ஹமாஸ் போராளிகளைக் கொன்றுள்ளனர். ஹமாஸின் முக்கிய தளபதியான மர்வான் இசா கடந்த வாரம் இஸ்ரேலிய நடவடிக்கையில் கொல்லப்பட்டார். மீதமுள்ள உயர்மட்ட தலைவர்கள் ஹமாஸ் சுரங்கப்பாதையில் மறைந்திருக்க வாய்ப்புள்ளது” என்று கூறினார்.
ஹமாஸின் இராணுவப் பிரிவின் தலைவரான இசா, இஸ்ரேலுக்கு எதிரான கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலைத் திட்டமிட உதவினார் என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை கடந்த வாரம் கூறியது. போர் தொடங்கியதில் இருந்து 1 மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனிய குடிமக்கள் தஞ்சம் அடைந்துள்ள நகரத்தில் விரைவில் ஒரு பெரிய நடவடிக்கையை தொடங்கவுள்ளதாக இஸ்ரேல் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நகரம் எகிப்து மற்றும் இஸ்ரேலில் இருந்து காசாவிற்கு மனிதாபிமான உதவிக்கான முதன்மை நுழைவுப் புள்ளியாகவும் செயல்படுகிறது.