பல் பிடுங்கப்பட்ட விவகாரம் - டிஜிபிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் சம்மன்!
நெல்லை அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு வந்தவர்களின் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு டிஜிபிக்கு தேசிய மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் கோட்டத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில், வழக்குகளில் விசாரணைக்காக வருபவர்களிடம் விசாரணை நடத்தும் பொழுது, ஏ.எஸ்.பியாக இருந்த பல்வீர் சிங் பல்லைப் பிடுங்கி துன்புறுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக பல்வீர் சிங் உட்பட 15 பேர் மீது சிபிசிஐடி போலீசார் நான்கு வழக்குகள் பதிவு செய்தனர். இதனையடுத்து இந்த குற்றச்சாட்டு குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விவகாரத்தில் மனித உரிமை ஆர்வலர் ஆசிஸ் கோயல் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு டிஜிபி பதில் அளித்து அறிக்கை சமர்ப்பிக்க 4 வார காலம் அவகாசம் வழங்கி கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தேசிய உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றி எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆணையத்திற்கு இதுவரை அறிக்கை சமர்ப்பிக்காத நிலையில், மார்ச் 1ஆம் தேதி புதுடெல்லியில் உள்ள தேசிய மனித உரிமை ஆணையத்தில் ஆஜராக டிஜிபிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், பிப்ரவரி 23ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பித்தால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. நான்கு முறை அறிக்கை தாக்கல் செய்வது தொடர்பாக நினைவூட்டல் வழங்கப்படும் தமிழக டிஜிபி இடம் இருந்து எந்த விதமான பதிலும் கிடைக்கவில்லை எனவும் மனித உரிமை ஆணைய உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.