சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை குறைவு!
சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.50 -க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.35 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை கோயம்பேட்டில் மொத்த காய்கறிச் சந்தை உள்ளது. இங்கு, பல்வேறு மொத்த மற்றும் சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. கோயம்பேடு காய்கறி சந்தைக்கு ஆந்திர மாநிலம் பலமனேரி, புங்கனூர், மதனபள்ளி, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய இடங்களில் இருந்தும், கர்நாடக மாநிலம் கோலார், சீனிவாசபுரம், சிந்தாமணி, ஒட்டிப்பள்ளி ஆகிய பகுதிகளில் இருந்தும் அதிக அளவில் தக்காளி விற்பனைக்கு வருகிறது.
இந்த சூழலில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர் மழையின் காரணமாக தமிழ்நாட்டின் வெளி மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகள் வரத்து வெகுவாக குறைந்தது. இதனால் அனைத்து வகையான காய்கறிகளின் விலையும் கடுமையாக உயர்ந்தது. இந்த நிலையில், இன்று தக்காளி, வெங்காயம், கேரட்டின் விலை குறைந்துள்ளது.
அந்த வகையில், கோயம்பேடு சந்தையில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.50 -க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று 15 ரூபாய் குறைந்து ஒரு கிலோ ரூ.35 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெங்காயம் நேற்று ரூ.40 -க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 10 ரூபாய் குறைந்து ரூ.30 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கேரட் ரூ.120 -க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் 20 குறைந்து ரூ.100 -க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.