Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்!” - செல்வப்பெருந்தகை!

07:06 PM Jun 03, 2024 IST | Web Editor
Advertisement

“சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 

Advertisement

நாடு முழுவதிலும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று அமலுக்கு வந்தது. இந்நிலையில் இந்த கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் எனவும், இல்லையேல் பாதிக்கப்பட்ட மக்கள் சுங்கச்சாவடிகளில் போராட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது;

“நாடு முழுவதும் உள்ள 1228 சுங்கச்சாவடிகளில் சுமார் 600 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில், தமிழகத்தில் 36 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி, 5 முதல் 10 சதவிகிதம் வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியதன் அடிப்படையில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான பயணக் கட்டணம் ரூபாய் 5 முதல் 20 வரையிலும், மாதாந்திர பாஸ் கட்டணம் ரூபாய் 100 முதல் 400 வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது. பாஜக ஆட்சியில் உயர்த்தப்பட்ட சுங்க கட்டணம், தேர்தல் முடிந்தவுடனே மீண்டும் கட்டண உயர்வு அமலுக்கு வந்திருப்பது வாகன ஓட்டிகளிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. இதன் காரணமாக காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

2023 டிசம்பரில் சிஏஜி அளித்த அறிக்கையில் ஒன்றிய நெடுஞ்சாலைத்துறையின் 7 திட்டங்களை ஆய்வு செய்ததில், ரூபாய் 7 லட்சத்து 50 ஆயிரம் கோடி முறைகேடுகள் நடந்ததாக அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில் நெடுஞ்சாலைத்துறை மீது விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கோரிக்கை எழுப்பின.

ஆனால், மத்திய பாஜக அரசு சிஏஜி தெரிவித்த முறைகேடுகள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தற்போது தேர்தல் முடிந்தவுடனேயே தமிழகத்திலுள்ள 36 சுங்கச்சாவடிகளில் உயர்த்தப்பட்ட சுங்க கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். அப்படி திரும்பப் பெறவில்லையெனில், பாதிக்கப்பட்ட மக்களே அந்தந்த சுங்கச்சாவடிகளில் போராட வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Tags :
CongressNHAIselvaperunthagaiTamilNaduToll Chargetoll plaza
Advertisement
Next Article