தொளசம்பட்டி அப்பரமேய பெருமாள் கோயில் தேரோட்டம் - ஏராளமான பக்தர்கள் தரிசனம்!
ஓமலூர் அருகே 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அப்பரமேய பெருமாள் கோயிலில் 3 நாட்கள் திருதேரோட்டம் தொடங்கியது.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி பகுதியில் சுமார் 500
ஆண்டுகளுக்கு மேலான பழமையான அப்பரமேய பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி மூன்று நாள்
திருத்தேரோட்டம் நடத்துவது வழக்கம். இந்த மாசி மாதத்தில் நடைபெறும் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.
இதையும் படியுங்கள் : பேச்சுவார்த்தை தோல்வி – விவசாயிகள் 4வது நாளாக போராட்டம்!
இந்நிலையில், இந்த ஆண்டும் கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா நேற்று மாலை முதல் நாள் திருத்தேரோட்டம் தொடங்கியது. முன்னதாக திருக்கோயிலில் சாமி அப்பரமேயர் பெருமாள் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனை செய்யப்பட்டது. கோயிலில் இருந்து மாட்டின் மீது பெருமாள் அலங்கரிக்கப்பட்டு எடுத்துச் சென்று திருத்தேரில் வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட கவுன்சிலர் சண்முகம், திமுக ஒன்றிய செயலாளர் செல்வகுமார் ஆகியோர் தேரின் வடத்தை பிடித்து தொடங்கி வைத்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷம் எழுப்பி தேரை இழுத்தனர்.
கோயில் வளாகத்தில் இருந்து தொளசம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் வரை வந்து முதல் நாள் தேர் நிலை நிறுத்தப்பட்டது . தொடர்ந்து, இன்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில்
இருந்து தொளசம்பட்டி பேருந்து நிறுத்தம் வரை செல்லும் திருத்தேர், நாளை (பிப். 17) கோயிலை வந்து அடையும். இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்திக் கொண்டனர்.