"ஒன்றாக இணைந்து ஜனநாயகத்தை மேலும் துடிப்பானதாக மாற்றுவோம்" - பிரதமர் மோடி
ஒன்றாக இணைந்து நமது ஜனநாயகத்தை மேலும் துடிப்பானதாகவும், பங்கேற்பு மிக்கதாகவும் மாற்றுவோம் என பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் (102 தொகுதிகள்) கடந்த மாதம் 19-ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் (88 தொகுதிகள்) கடந்த மாதம் 26-ம் தேதியும், கடந்த 7-ம் தேதி 3ம் கட்ட தேர்தலும் (93 தொகுதிகள்), கடந்த 13-ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் (96 தொகுதிகள்), கடந்த 20-ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவும் (49 தொகுதிகள்), கடந்த மே 25ம் தேதி 6ம் கட்ட வாக்குப்பதிவு (58 தொகுதிகள்) நடைபெற்றது. 7-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று (57 தொகுதிகள்) நடைபெற்று வருகிறது. தேர்தலில் நாடு முழுவதும் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
பிரதமர் மோடி போட்டியிடும் உத்திர பிரதேசம் வாரணாசி தொகுதி உட்பட உ.பி, பீகார், ஒடிசா, சண்டிகர், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்கம், ஜார்கண்ட் என 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த 57 மக்களவைத் தொகுதிகளில் மொத்தம் 904 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 3வது முறையாக களம் காண்கிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் அஜய் ராய் போட்டியிடுகிறார். பிரதமர் மோடி நேற்று முன் தினம் பாராளுமன்ற தேர்தலுக்கான இறுதிகட்ட பிரசாரத்தை முடித்துக்கொண்டு கன்னியாகுமரியில் 3 நாட்கள் தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் தனது எக்ஸ் தள பதிவில், கூறியிருப்பதாவது, "இன்று 2024 மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்டம். இளைஞர்கள் மற்றும் இளம் பெண் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்வார்கள் என்று நம்புகிறேன். ஒன்றாக இணைந்து நமது ஜனநாயகத்தை மேலும் துடிப்பானதாகவும், பங்கேற்பு மிக்கதாகவும் மாற்றுவோம்" என்று பதிவிட்டுள்ளார்.
Today is the final phase of the 2024 Lok Sabha elections. As 57 seats across 8 states and UTs go to the polls, calling upon the voters to turnout in large numbers and vote. I hope young and women voters exercise their franchise in record numbers. Together, let’s make our…
— Narendra Modi (@narendramodi) June 1, 2024