மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுடன் இன்று நேர்காணல் - திமுக அறிவிப்பு!
விருப்ப மனு அளித்தவர்களுடன் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 10) நேர்காணல் நடத்துகிறார்.
நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர் மார்ச் 1-ம் தேதி முதல் பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை அக்கட்சி தலைமை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி, ஸ்ரீபெரும்புதூரில் டி.ஆர்.பாலு, தென் சென்னை தொகுதியில் தமிழச்சி தங்கபாண்டியன், வடசென்னை தொகுதிக்கு கலாநிதி வீராசாமி, வேலூர் தொகுதியில் கதிர் ஆனந்த் ஆகியோர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தனர்.
இதேபோன்று திமுக சார்பில் புதிதாக போட்டியிட பெரம்பலூர் தொகுதியில் அமைச்சர் கே.என்.நேரு மகன் அருண் நேரு, நெல்லை தொகுதியில் சபாநாயகர் அப்பாவு மகன் அலெக்ஸ் அப்பாவு உள்ளிட்டோர் விருப்ப மனு அளித்தனர். மொத்தம் 2 ஆயிரத்து 984 விருப்ப மனுக்கள் பெறப்பட்டது.
இந்நிலையில், விருப்ப மனு அளித்தவர்களுடன் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடத்துகிறார். மேலும் அந்தந்த நாடாளுமன்ற தொகுதியை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் மட்டுமே நேர்காணலில் பங்கேற்க வேண்டும் என்றும், ஆதரவாளர்கள், பரிந்துரையாளர்களை கண்டிப்பாக அழைத்து வரக்கூடாது என்றும் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.