எந்த உறவிலும் இணைய விரும்பாதவர்களுக்கான சிங்கிள்ஸ் தினம் இன்று!
எந்த உறவிலும் இணைய விரும்பாதவர்கள் தங்களை கொண்டாடும் வகையில் நவம்பர் 11 தேதி சிங்கிள்ஸ் தினமாக கொண்டாடி வருகிறார்கள். அப்படி இன்று கொண்டாடப்படும் சிங்கிள்ஸ் தினம் குறித்த வரலாறு என்ன? அதன் பின்னணி என்ன என்பது குறித்து பார்க்கலாம்....
ஒவ்வொரு வருடமும் பிப். 14ம் தேதி காதலர் தினமானது உலகம் முழுவதும் உள்ள காதலர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதே போல், எந்த உறவிலும் இணையாமல் உள்ளவர்கள் நவம்பர் 11ம் தேதியை சிங்கிள்ஸ் தினமாக கொண்டாடி வருகிறார்கள்.
இவர்கள் எந்த விதமான காதல் அல்லது திருமண பந்தத்திலும் தங்களை இணைத்துக் கொள்ள விரும்புவதில்லை. தனிமையில் உள்ள நன்மைகளை உணர்ந்து, சிங்கிள்ஸாக வாழ விருப்புவதாக கூறுகிறார்கள். காதல் தோல்விகளைக் கண்டவர்களும், அதன் பிறகு தங்களை சிங்கிள்ஸ் என்றே அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.
சிங்கிள்ஸ் தினமானது முதன்முதலில் 1993ம் ஆண்டு சீனாவின் நான்ஜிங் பல்கலைக்கழகத்தில் கொண்டாடப்பட்டது. காதலர் தினத்திற்கு எதிராக, 'பேச்சுலர்ஸ் தினம்' என்ற பெயரிலேயே முதலில் அழைக்கப்பட்டது. அன்றைய தினம், சிங்கிள்ஸ் மக்கள் தங்களுக்கு தாங்களே பரிசுப்பொருட்கள் கொடுத்தும், தங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்தும் மகிழ்கிறார்கள். மேலும் சிலர் தங்கள் நன்பர்களுக்கு விருந்துகள் வைத்தும் கொண்டாடுகிறார்கள்.
இந்நாளை சீனாவின் ஆன்லைன் விற்பனை தளமான அலிபாபா நிறுவனம் பிரபலப்படுத்தியது. 2009 முதல் நவ. 11 அதாவது 11:11 எனும் எண்களை அடிப்படையாகக் கொண்டு தள்ளுபடிகளை வாரி இறைத்தது. பல நாடுகளில் 11:11 எனும் இரட்டை 11 ராசியான எண்களாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த வியாபார உக்தியை எல்லா இணைய நிறுவனங்களும் சீனாவில் பின்பற்ற தொடங்க, இந்நாள் மிகப்பெரும் லாபத்தை ஈட்டும் ஷாப்பிங் தினமாக மாறியது. இதனையடுத்து ஆசியாவின் பல்வேறு பகுதிகளிலும் இந்நாள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.