"மாணவர்களை கொண்டாடும் ஆசிரியர்களுக்கும் ஆசிரியர்களை கொண்டாடும் மாணவர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்" - #MariSelvaraj
மாணவர்களை கொண்டாடும் ஆசிரியர்களுக்கும் ஆசிரியர்களை கொண்டாடும் மாணவர்களுக்கும் எங்கள் ஆசிரியர் தின வாழ்த்துக்கள் என இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் வாழை. இப்படத்தில் இரண்டு சிறுவர்கள் முதன்மை கதாபாத்திரங்களிலும் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் நவ்வி ஸ்டூடியோஸ் இணைந்து வழங்கியிருந்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் கதை, மாரி செல்வராஜ் வாழ்க்கையில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இத்திரைப்படத்தில் நிகிலா விமல் பூங்கொடி டீச்சர் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மாரி செல்வராஜ் அவரின் படங்களில் ஆசிரியர் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். முன்னதாக அவர் எடுத்த 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்திலும் ஆசிரியருக்கு முன்னுரிமை கொடுத்திருந்தார். இந்த நிலையில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இயக்குநர் மாரி செல்வராஜ் வாழை திரைப்படத்தின புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், "மாணவர்களை கொண்டாடும் ஆசிரியர்களுக்கும் ஆசிரியர்களை கொண்டாடும் மாணவர்களுக்கும் எங்கள் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார்.
சுதந்திர இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவரும், 2-ஆவது குடியரசுத் தலைவரும், முன்னாள் ஆசிரியருமான டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக 1962 முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.