"இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும்!" - துணை முதலமைச்சர் #UdhayanidhiStalin பேச்சு
இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக தமிழ்நாட்டை கொண்டு வர வேண்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள் இன்று (அக்.4) முதல் 24 ம் தேதி வரை சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் நடைபெறுகிறது. தடகளம், டென்னிஸ், பேட்மிண்டன், கபடி, சிலம்பம், பளுதூக்குதல், கால்பந்து, ஹாக்கி, குத்துச்சண்டை, நீச்சல், கிரிக்கெட், கூடைப்பந்து, கைப்பந்து, கேரம், வாள்வீச்சு, செஸ், ஜிம்னாஸ்டிக்ஸ் உள்பட 36 வகையான விளையாட்டுகள் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டியை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது,
"மாணவர்கள் முன்னிலையில் இந்தப் போட்டியை தொடங்கி வைப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உங்களிடம் உள்ள உற்சாகம் எனக்கு தொற்றிக் கொண்டது. நான் துணை முதலமைச்சர் ஆக பொறுப்பேற்றுக்கொண்ட பின் நான் போட்ட முதல் கையெழுத்து இந்த போட்டிக்கான கையெழுத்துதான். இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது. ஆனால், இந்தியாவில் அனைத்து துறைகளிலுமே சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு தான்.
நாம் செய்யும் அனைத்துமே மகத்தானவை. கடந்த முறை நடத்தப்பட்ட போட்டியில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இந்த ஆண்டு போட்டியில் 11 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டிக்காக ரூ.82 கோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கீடு செய்துள்ளார். இந்தியாவிலேயே விளையாட்டுக்காக இவ்வளவு பணம் ஒதுக்கீடு செய்வது தமிழ்நாடு மட்டும்தான். இவ்வளவு போட்டிகளை நடத்துவதும் தமிழ்நாடு தான்.
இந்த ஆண்டு இதில் பல்வேறு புதிய போட்டிகளை சேர்த்துள்ளோம். சர்வதேச போட்டிகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் சாதனை படைத்து வருகின்றனர். மற்றொரு பக்கம் கார் பந்தயம் போன்ற பல்வேறு போட்டிகள் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு வருகிறது. இது போன்ற சாதனை பயணம் தொடர்ந்து நடைபெற்று வரும். இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக தமிழ்நாட்டை கொண்டு வர வேண்டும்." இவ்வாறு துணை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.