ஆவின் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவன காலிப் பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு!
ஆவின், மின்சார வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கான காலிப் பணியிடங்கள் முதன்முறையாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் அரசுத்துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலமாக நிரப்பப்படுகின்றன. ஒவ்வொரு பதவியின் கல்வித்தகுதிக்கேற்ப குரூப்-1, குரூப்-2, குரூப்-2-ஏ, குரூப்-4 என பல்வேறு நிலைகளில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், 2024ம் ஆண்டிற்கான வருடாந்திர தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி கடந்த 20-ம் தேதி வெளியிட்டது.
அந்த அட்டவணையில் 18 வகையான பணிகளில் 3772 காலியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தேர்வு அட்டவணையில் ஆவின், மின்சார வாரியம், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி நேற்று ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட புதியஅறிவிப்பின்படி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் உதவியாளர் பதவி, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் உதவியாளர் (கிரேடு-3) பதவி ஆகியவை குரூப்-2 மற்றும் குரூப்-2-ஏ தேர்வின் கீழும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் இளநிலை உதவியாளர், தமிழ்நாடு வக்பு வாரியத்தில் இளநிலை உதவியாளர், தமிழ்நாடு குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் இளநிலை உதவியாளர், தமிழ்நாடு சிறுதொழில் கழகத்தில் இளநிலை உதவியாளர், ஆவின் நிறுவனத்தில் ஜுனியர் எக்சிகியூட்டிவ் (ஆபீஸ்), ஜுனியர் எக்சிகியூட்டிவ் (தட்டச்சு)உள்ளிட்ட பதவிகள் ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வின் கீழும் கொண்டுவரப்பட்டுள்ளன.
அதேபோல், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தொழில்நுட்ப உதவியாளர், ஆவின் நிறுவனத்தில் டெக்னீசியன் (லேப்) உள்ளிட்ட பதவிகள் ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணி தேர்வின்கீழும், மாநிலபோக்குவரத்துக் கழகத்தில் உதவிமேலாளர் (சட்டம்), தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் மேலாளர் (கிரேடு 3) - சட்டம் மற்றும் முதுநிலை அலுவலர் (சட்டம்) ஆகிய பணிகள் ஒருங்கிணைந்த சட்ட பணிகள் தேர்வின் கீழும் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதுவரை, பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் அந்தந்த நிறுவனங்கள் வாயிலாக அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்பப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.