#TNPSC குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு!
தமிழக அரசுப் பணிகளுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
6,244 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 30-ம் தேதி வெளியானது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், தனி உதவியாளர், கிளார்க் என பல பணிகளுக்கு தேர்வு நடைபெற்றது. ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஜூன் 9-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் தேர்வு நடைபெற்றது.
சுமார் 20 லட்சம் பேர் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் 7,247 மையங்களில் 15.8 லட்சம் தேர்வர்கள் தேர்வு எழுதி இருந்தனர். தொடர்ந்து குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டு, காலியிடங்களின் எண்ணிக்கை 6724 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது கூடுதலாக 2,208 இடங்கள் சேர்க்கப்பட்டு 8,932 காலிப்பணியிடங்களாக அதிகரித்துள்ளது.
தேர்வு நடைபெற்று மூன்று மாதங்கள் ஆனநிலையில் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. தேர்வு முடிவுகள tnpscresults.tn.gov.in, tnpscexams.in இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலையில் தேர்வாணையத்தின் கூட்டம் நடைபெற்ற நிலையில், தேர்வு முடிவுகள் உடனடியாக வெளியாகியுள்ளன.