TNPSC குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு!
தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2A முதன்மைத் தேர்வு முடிவுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அரசுத் துறைகளில் குரூப் 2 மற்றும் 2A பணி நிலையில் 5,446 காலிப் பணியிடங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 2 மற்றும் 2A முதல்நிலைத் தேர்வு கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில், 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வை எழுதினர்.
இதையும் படியுங்கள் : “வரும் கல்வியாண்டு முதல் 2 ஆண்டு B.Ed படிப்புகளுக்கு அனுமதி இல்லை”.
நகராட்சி ஆணையர், துணைப் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு உதவியாளர், காவல் துறையின் பல்வேறு பிரிவுகளில் உள்ள சிறப்புக் கிளை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5,446 பணியிடங்களை நிரப்ப குரூப் 2 தேர்வுகள் நடத்தப்பட்டன. அரசுத் துறைகளில் 6,151 பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட குரூப் 2 போட்டித் தேர்வின் முடிவுகள் வெளியாகி உள்ளன.
குரூப் 2 மற்றும் 2A காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 785 அதிகரிக்கப்பட்ட நிலையில், ஏற்கெனவே இருந்த 5,446 பணியிடங்கள், 6,231 ஆக உயர்ந்ததாகக் கூறப்பட்டது. இந்த நிலையில் ஏற்கெனவே இருந்த 5,446 பணியிடங்கள் 6151 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அண்மையில் அறிவித்தது. இதன்படி 161 நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத 5,990 பதவிகளுக்கும் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.