டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியானது!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ முதல் நிலை தேர்வுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு அரசுத் துறையில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை தேர்வுகள் மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நிரப்பி வருகிறது. குரூப் 1 முதல் குரூப் 4 என பல்வேறு நிலைகளில் தேர்வுகள் நடத்தப்பட்டு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் உதவி ஆய்வாளர், துணை வணிக வரி அலுவலர், சார் பதிவாளர் நிலை II, தனிப்பிரிவு உதவியாளர், வனவர் உள்ளிட்ட குரூப் 2 பதவிகளுக்கு 507 பணியிடங்களும், உதவியாளர், வருவாய் உதவியாளர், கணக்கர் உள்ளிட்ட குரூப் 2ஏ பதவிகளில் 1820 காலி பணியிடங்கள் என மொத்தமாக 2327 காலி பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டது.
இந்த பணியிடங்களுக்கான குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகளும் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெற்றது. இந்த முதல் நிலைத் தேர்வை 5.81 லட்சம் பேர் எழுதினர். இந்நிலையில் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல்நிலை தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை https://tnpscresults.tn.gov.in/ என்ற இணைய முகவரியின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
குரூப் 2 முதல்நிலை தேர்வில் வெற்றிப் பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வுகள் அடுத்தாண்டு பிப்ரவரியில் நடைபெறும் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது.