டிஎன்பிஎல் கிரிக்கெட்: மதுரை அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது கோவை அணி!
டிஎன்பிஎல் 21வது லீக் ஆட்டத்தில் மதுரை அணியை வீழ்த்தி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது கோவை அணி.
8 அணிகள் பங்கேற்றுள்ள 8வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லை சங்கர் நகரில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் தங்களுக்குள் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முந்தைய பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.
அந்த வகையில், நேற்று நடைபெற்ற 22வது லீக் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் - மதுரை பாந்தஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மதுரை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கோவை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சுரேஷ் குமார் 16 ரன்களிலும், சுஜய் 15 ரன்களிலும் அவுட் ஆகினர். இவர்களை அடுத்து களமிறங்கிய முகிலேஷ் 21 ரன்களிலும், ராம் அரவிந்த் 8 ரன்னிகளிலும், சாய் சுதர்சன் 34 ரன்களிலும் வெளியேறினர்.
இதனையடுதது ஆடிய கேப்டன் ஷாருக்கான் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர் முடிவில் கோவை அணி 9 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது. மதுரை தரப்பில் அஜய் கிருஷ்ணா 4 விக்கெட்டும், மிதுன் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். தொடர்ந்து, 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்கியது. அணியின் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து வெளியேறினர்.
அதன்படி, மதுரை அணியின் வீரர்களான கேப்டன் ஹரி நிஷாந்த் ரன் எதுவும் எடுக்காமலும், சுரேஷ் லோகேஷ்வர் 6 ரன்களிலும், சதுர்வேத் 10 ரன்களிலும், ஸ்ரீ அபிசேக் 1 ரன்னிலும், சசிதேவ் 2 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினர். பின்னர் ஆடிய மிதுன் 26 ரக்களிலும், கார்த்திக் மணிகண்டன் 33 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களில் மதுரை அணி 120 ரன்கள் எடுத்த நிலையில் ஆல்-அவுட் ஆனது. கோவை அணி தரப்பில் கவுதம் தாமரைக் கண்ணன் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.
இதன் மூலம் 43 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை அணியை வீழ்த்தி கோவை அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் கோவை அணி 10 புள்ளிகளுடன் முதல் அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இன்றைய ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.