For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"பத்திரிக்கையாளர்களின் கருத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் #TNGovt உறுதியாக உள்ளது" - அமைச்சர் சாமிநாதன் அறிக்கை

02:07 PM Nov 29, 2024 IST | Web Editor
 பத்திரிக்கையாளர்களின் கருத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பதில்  tngovt உறுதியாக உள்ளது    அமைச்சர் சாமிநாதன் அறிக்கை
Advertisement

பத்திரிக்கையாளர்களின் கருத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

"மக்களாட்சியின் பாதுகாவலர்களான பத்திரிகையாளர்களின் நலனைக் காப்பதில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதிமுக அரசின் பத்தாண்டுகால ஆட்சியில் பத்திரிகைத் துறையினர் மீது போடப்பட்ட பல்வேறு அவதூறு வழக்குகளை ஆட்சிப் பெறுப்பெற்றவுடனயே ரத்து செய்ய உத்தரவிட்டு கருத்துரிமையைக் காத்து நின்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பத்திரிகையாளர்களின் நலனைக் காக்கும் பொருட்டு இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ‘பத்திரிக்கையாளர் நலவாரியம்’ உருவாக்கப்பட்டது. இந்த நலவாரியத்தில் 3300 பேர் உறுப்பினர்களாக இணைக்கப்பட்டுள்ளனர்.

நலவாரிய உறுப்பினர்களுக்கு கல்வி உதவித் தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட 21 வகையான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு அரசு வழங்கி வருகின்றது. அதிமுக ஆட்சிக்காலத்தில் பத்திரிகையாளர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்த செய்தியாளர் அங்கீகார அடையாள அட்டை (Accreditation Card) வழங்கப்படாமலும், அதற்கான குழுவும் அமைக்கப்படாமலும் இருந்தது.

இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அதற்கான குழு அமைக்கப்பட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இது வரை தமிழ்நாடு முழுவதும் 2,431 செய்தியாளர் அங்கீகார அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 446 செய்தியாளர்களுக்கு சுகாதார அடையாள அட்டைகள் (Health Card) வழங்கப்பட்டுள்ளன.

பத்திரிகையாளர் நலவாரியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் செய்தியாளர்களுக்கு ஓய்வூதியம், மறைந்த செய்தியாளர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி போன்ற பத்திரிக்கையாளர்களின் நலன்காக்கும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

“நான் முதலில் பத்திரிகையாளன்; பிறகுதான் அரசியல்வாதி” என்பார் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி. அவர் காட்டிய வழியில் செயல்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பத்திரிக்கையாளர்களின் கருத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் உறுதியாகவும், அவர்களின் நலன்களை காப்பதில் மிகுந்த அக்கறையுடனும் செயலாற்றி வருகின்றது"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement