தமிழ்நாட்டில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு - செய்முறைத் தேர்வுக்கான அட்டவணை வெளியீடு!
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை முதல் பிப்.29-ம் தேதி வரை செய்முறைத்தேர்வுகள் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான இந்த ஆண்டிற்கான பொதுத் தேர்வு 12ம் வகுப்பிற்கு மார்ச் 1-ம் தேதி முதல் 22-ம் தேதி வரையிலும், 11ம் வகுப்பிற்கு மார்ச் 4-ம் தேதி முதல் 25-ம் தேதி வரையிலும், 10ம் வகுப்பிற்கு மார்ச் 26-ம் தேதி முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.
இந்நிலையில், மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் 12ம் வகுப்பிற்கு நாளை முதல் 17-ம் தேதி வரையிலும், 11ம் வகுப்பிற்கு பிப்ரவரி 19-ம் தேதி முதல் 24-ம் தேதி வரையிலும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் செய்முறைத்தேர்வு பிப்ரவரி 23-ம் தேதி முதல் 29-ம் தேதி வரையும் நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு அரசுத் தேர்வுத்துறை இயக்குனரகம் ஏற்கனவே அறிவுறுத்திருந்தது.
இதையும் படியுங்கள் ; #INDvsAUS | U19 உலகக்கோப்பை இறுதிப்போட்டி | டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது ஆஸ்திரேலிய அணி…!
அதன்படி, செய்முறைத்தேர்வினை நடத்துவதற்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் ஏற்பாடுகளை செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் 12 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு முதல்சுற்று நாளை முதல் 17-ம் தேதி வரையிலும், 2ம் சுற்று பிப்ரவரி 19-ம் தேதி முதல் 23-ம் தேதி வரையிலும் 2 சுற்றுக்களாக நடைபெற உள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும், முதல்வர்களுக்கும் அறிவுறுத்தி வழங்கினார். அவர் கூறியதாவது,
"செய்முறைத் தேர்வினை அரசுத் தேர்வுத்துறை வழங்கியுள்ள வழிகாட்டுதல்படி எந்தவிதமான புகாருக்கும் இடம் அளிக்காமல் நடத்தப்பட வேண்டும். செய்முறைத் தேர்விற்கான வெற்று மதிப்பெண் பட்டியலை https://www.dge.tn.gov.in/ என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும். அதில் தாமதம் ஆக கூடாது. இதனால், பின் விளைவுகள் ஏற்பட்டால் அதற்கு பள்ளியின் தலைமை ஆசிரியரே பொறுப்பாவார்.
மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப செய்முறைத்தேர்வினை அதிகப்பட்சமாக ஒரு நாளைக்கு 4 பிரிவுகளாக நடத்தலாம். ஒரு பாடத்தில் செய்முறைத்தேர்விற்கான மாணவர்களின் எண்ணிக்கை 120க்கு கீழே இருந்தால் அவர்களுக்கு ஒரே நாளில் செய்து முடிக்கப்பட வேண்டும். செய்முறைத்தேர்வில் அளிக்கப்படும் அக மற்றும் புறத்தேர்வு மதிப்பெண்களை எக்காரணம் கொண்டும் வெளியிடக்கூடாது. புறத் தேர்விற்கு வராத மாணவர்களுக்கு அக மதிப்பெண்கள் இருந்தால் வழங்க வேண்டும். அக மதிப்பெண்கள் இல்லாவிட்டால் வரைவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்.
தேர்வர்களின் வருகை சான்றிதழ் அந்தந்த மையங்களில் பாதுகாக்கப்பட வேண்டும். மதிப்பெண் பட்டியில் கடந்தாண்டு, அக மதிப்பெண்கள் பதிவிடப்பட்டுள்ளது. ஆனால், புற மதிப்பெண்கள் மற்றும் மொத்த மதிப்பெண்கள் பதிவிடப்படவில்லை. மதிப்பெண் பட்டியலில் தேர்வு நடத்தும் ஆசிரியர்கள் கையெழுத்து விடப்பட்டிருந்தன. எனவே செய்முறைத்தேர்வினை எந்தவித புகாரும் இன்றி நடத்தப்பட வேண்டும்" இவ்வாறு தெரிவித்தார்.