கிரேஸ் பானுவின் "தீட்டுப் பறவை” - நூல் அறிமுகம்
மாற்றுப் பாலினர்கள் உரிமை செயல்பாட்டாளரரும் திருநங்கையுமான கிரேஸ் பானுவின் “தீட்டுப் பறவை” பற்றிய புத்தகத்தின் அறிமுகத்தை காணலாம்.
ஒடுக்கப்பட்டவர்களிலும் மிகவும் ஒடுக்கப்பட்டவர்களாக கருதப்படுபவர்கள்தான் திருநங்கைகள், திருநம்பிகள் மற்றும் மாற்றுப் பாலினத்தவர்கள். சமூகத்தில் இருந்து அவர்கள் புறக்கணிக்கப்பட்டு சமூக விலக்கு செய்யப்பட்டனர். இதனால் அவர்களால் முறையான கல்வி, வேலை வாய்ப்பு, சமூக அங்கீகாரம் என அத்தனையும் மறுக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்ட சமூகமாக மாற்றப்பட்டனர்.
அப்படியான துரதிர்ஷ்டமான் இந்திய சமூகத்தில் அவர்களுக்காக எழுதப்படுகிற எழுத்துக்கள் கூட கவனிக்கப்படுவதில்லை அல்லது உரிய சமூக அங்கீகாரம் கிடைப்பதுமில்லை. இப்படியான சூழலில்தான் திருநங்கை பிரஸ் எனும் பதிப்பகத்தை ஏற்படுத்தி திருநர் சமூகத்தின் ஆக்கங்களை எழுத்து வடிவில் கவிதைகளாக , சிறுகதைகளாக, கட்டுரைகளாக என புத்தகங்களை வெளியிட்டு வருகிறார் சமூக செயல்பாட்டாளரான கிரேஸ் பானு.
இதன் மூலம் திருநர் சமூகத்திற்கு ஆதரவான ஒரு மனோநிலையை வலிமையாக உருவாக்கியுள்ளார் ஆசிரியர் கிரேஸ் பானு. இப்புத்தகம் குறித்து நியூஸ் 7 தமிழுக்கு அளித்த நேர்காணலில் கிரேஸ் பானு பேசும் போது ” அமெரிக்காவில் தான் தங்கியிருந்த நாட்களில் சந்தித்த நபர்கள், பங்கேற்ற நிகழ்வுகள், பார்க்கச் சென்ற இடங்கள் என அனைத்தும் குறிப்புகளாக எழுதியுள்ளேன். மேலும் அதில் தனது வாழ்வையும் தனது திருநர் சமூகத்தின் வாழ்வையும் இணைத்துப்பார்த்து எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
திருநங்கைகளுக்காக அவர்களது ஆக்கங்களை , படைப்புகளை பொது சமூகத்தில் கொண்டுவருவதற்கான முயற்சியில் ஏற்படுத்தப்பட்டுள்ள திருநங்கை பிரஸ் அரங்கு சென்னை புத்தகக் கண்காட்சியில் கவனம் பெற்று வருகிறது. தீட்டுப் பறவை “திருநங்கையின் அமெரிக்க நாட்குறிப்பிலிருந்து” எனும் புத்தகம் அரங்கு எண் 164Dல் கிடைக்கிறது.
-ச.அகமது, நியூஸ் 7 தமிழ்