112 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்ட #Titanic செய்தித்தாள்!
டைட்டானிக் கப்பல் விபத்தை தொடர்ந்து வெளியான செய்தித்தாள் ஒன்று 112 வருடங்களுக்கு பிறகு இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலக மக்களால் மறக்க முடியாத கடல் விபத்துகளில் ஒன்று டைட்டானிக் விபத்து. 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 மற்றும் 15 ஆம் தேதிக்கு இடைப்பட்ட இரவில் பனிப்பாறையில் மோதி டைட்டானிக் என்ற கப்பல் 3 மணிநேரத்தில் அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியது. இந்த விபத்தில் சுமார் 1500 பேர் உயிரிழந்தனர். ஆண்டுகள் கடந்தும் இந்த விபத்து மக்களால் மறக்க முடியாத துயர சம்பவமாகவே உள்ளது.
இந்த விபத்து குறித்தும், டைட்டானிக் கப்பல் குறித்தும் பல ஆராய்ச்சிகள் தற்போது வரை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த அசுர விபத்தை தொடர்ந்து வெளியான செய்தித்தாள் ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 20, 1912 ஆம் ஆண்டு The Daily Mirror நிறுவனம் வெளியிட்ட செய்தித்தாள், 112 ஆண்டுகளுக்கு பின் இங்கிலாந்தின் லிச்ஃபீல்ட் நகரத்தில் உள்ள ஒரு வீட்டின் அலமாரியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த செய்தித்தாள், உயிர்பிழைத்தவர்களின் பெயர் பட்டியலை சவுத்ஹாம்டன் நகரில் உள்ள ஒரு சுவரில் ஒட்டுவதற்காக காத்திருக்கும் இரு பெண்களை காட்டுகிறது. இந்த செய்தித்தாளை இங்கிலாந்தைச் சேர்ந்த ஹான்சன்ஸ் ஏல நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. அதன் உரிமையாளர் சார்லஸ் ஹான்சன், இது "சமூக வரலாற்றின் மதிப்புமிக்க பொருள்" என தெரிவித்துள்ளார்.