திருவேற்காடு: காலில் விழுந்த சிறுமி... கண்டித்த ஆட்சியர்
திருவேற்காட்டில் காலில் விழுந்து அனு அளித்த சிறுமியை மாவட்ட ஆட்சியர் கண்டித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பெருமாள் கோயில் தெரு பகுதியில் 250-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. குறிப்பாக கூவம் நதிக்கரையை ஒட்டி மேடான பகுதியில் அமைந்துள்ள இந்த குடியிருப்பு பகுதி நீர் பிடிப்பு பகுதிகளில் இருப்பதாக கூறுகின்றனர். மேலும் இந்த குடியிருப்புகளில் வெள்ள பாதிப்பு ஏற்படும் வாய்ப்பும் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் இந்த பகுதியை அகற்றுவதற்காக வருவாய் துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதையும் படியுங்கள்: ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் தோராயமாக 72% வாக்குப்பதிவு!
சுமார் 3 மணி நேரத்திற்கும் மேல் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பூந்தமல்லி வட்டாட்சியர், பொதுப்பணித்துறை அதிகாரிகள், நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கூவம் ஆற்றங்கரை பகுதியை சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அந்த பகுதியை சேர்ந்த மக்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும்,
குறிப்பிட்ட கால அவகாசமும் வழங்கப்படும், அதற்குள் அவர்கள் வீடுகளை காலி
செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த
நிலையில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்திற்கு வெளியே நீண்ட
நேரம் காத்திருந்தனர்.
பின்னர் கூட்டம் முடிந்து வெளியே வந்த மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். தங்கள் குடியிருப்புகளின் நிலைமை குறித்தும் விளக்கி கூறினார்கள். சிறுமி ஒருவர் தனக்கு ஒரு ஆண்டாக நகராட்சி அலுவலகத்தில் பிறப்பு சான்றிதழ் கொடுக்கவில்லை என ஆட்சியரிடம் புகார் மனுவை அளித்துவிட்டு அவரது காலில் விழுந்தார். அதனை பார்த்த ஆட்சியர் சிறுமியை கண்டித்து விட்டு நடவடிக்கை எடுப்பதாக கூறிவிட்டு சென்றார். சிறுமி ஆட்சியரின் காலில் விழுந்து மனு அளித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.