For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திருவாரூர் ஆழித் தேரோட்டம் - விண்ணதிர முழுக்கமிட்டு வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

10:32 AM Mar 21, 2024 IST | Web Editor
திருவாரூர் ஆழித் தேரோட்டம்   விண்ணதிர முழுக்கமிட்டு வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
Advertisement

ஆசியாவிலேயே மிகப் பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.  லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஆரூரா தியாகேசா என்ற கோஷத்தோடு தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

Advertisement

சைவத் தலங்களில் முதன்மை தலமாக விளங்குவது திருவாரூர் தியாகராஜர் கோயில். தியாகராஜர் கோயிலுக்கு பெருமை சேர்ப்பது ஆழித்தேர்.  ஏனெனில் இக்கோயிலின் தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேராகும்.  இக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த மாதம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  அதனைத் தொடர்ந்து தினந்தோறும் சுவாமி வீதி உலா காட்சிகள் நடைபெற்றன.  முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்று வருகிறது.  இதனை ஒட்டி தியாகராஜர் நேற்று இரவு அஜபா நடனத்துடன் கோயிலில் இருந்து புறப்பட்டு தேரில் எழுந்தருளினார்.

அதனைத் தொடர்ந்து இன்று காலை 8: 50 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டது. மாவட்ட
ஆட்சியர் சாரூஸ்ரீ தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.
இத் தேரோட்டத்தில் தமிழ்நாடு மற்றுமின்றி வெளி மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்களும் பங்கேற்று ஆரூரா தியாகேசா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.  ஆழித்தேர் என்ற பெயருக்கு ஏற்றார் போல் இத்தேரானது 96 அடி உயரமும்,  350 டன் எடையும் கொண்டு பிரம்மாண்டமாக ஆடி அசைந்து 4 ரத வீதிகள் வழியாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

இதற்கான முன்னேற்பாடு பணிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.  மாவட்டம் முழுவதுதிலிருந்தும் பொதுமக்கள் எளிதாக வந்து
செல்ல பல்வேறு வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து வழித் தடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  மேலும் பாதுகாப்பு பணிக்காக 2,000 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக விநாயகர், முருகர் தேர்கள் அதிகாலையில் வடம் பிடிக்கப்பட்டது.  தியாகராஜர் தேரை தொடர்ந்து அம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் தேர்களும் வடம் பிடிக்கப்பட உள்ளது.
கீழரத வீதியில் துவங்கிய தேரோட்டம் தெற்கு ரதவீதி, மேற்கு ரத வீதி, வடக்கு ரத
வீதி வழியாக வலம் வந்து இறுதியாக மாலை 7 மணி அளவில் நிலை அடியை வந்து சேரும்
என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Advertisement