திருவண்ணாமலை மண்சரிவு | உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த #DeputyCM உதயநிதி ஸ்டாலின்!
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக திருவண்ணாமலையில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையினால் நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு பின்புறம் சுமார் 2,668 அடி உயர மலையில் இருந்து பாறை ஒன்று உருண்டு மலை அடிவாரத்தில் உள்ள வ.உ.சி. நகர் 11-வது தெருவில் உள்ள வீடுகளின் அருகில் விழுந்தது.
அப்போது மண்சரிவு ஏற்பட்டதால் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழை நீருடன் மண் இறங்கியது. இதில் ஒரு வீட்டின் மீது நிலச்சரிவு ஏற்பட்டு முழுவதுமாக மூடியது. அந்த வீட்டில் கணவன், மனைவி, அவர்களின் குழந்தைள் 2 பேர் மற்றும் கணவனின் அண்ணன் குழந்தைகள் 3 பேர் என்று மொத்தம் 7 பேர் இருந்ததாகவும், மண்சரிவால் 7 பேரும் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் உள்ளே சிக்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை டவுன் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் உடனடியாக அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படியுங்கள் : #SchoolLeave | கனமழை எதிரொலி… எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளை தீவிரப்படுத்தினர். 24மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்று மீட்புப் பணிக்கு பின்னர் 7பேரின் உடல்களும் சடலமாக மீட்கப்பட்டது. பாறை விழுந்ததில் அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல்கள் உருக்குலைந்ததாக கூறப்படுகிறது. மீட்கப்பட்ட உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. ஒரே குடும்பத்தை சேர்ந்த, குழந்தைகள் உள்ளிட்டோர் 7 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்த சம்பவம், திருவண்ணாமலையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலைக்கு விரைந்த அவர் மண்சரிவு நடைபெற்ற இடத்தில் ஆய்வுமேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவர் மண்சரிவில் உயிரிழந்த ஏழு பேரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மீட்கப்பட்ட உடல்கள் கொண்டுசெல்லப்பட்ட நிலையில் அங்கு சென்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.