திருப்பூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு - குற்றவாளி என்கவுண்டரில் சுட்டுக்கொலை!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே குடிமங்கலம் போலீஸ் சிறப்பு எஸ்.ஐ.ஆக பணியாற்றி வந்தவர் சண்முகவேல். இதனிடையே, மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரன் தோட்டத்தில் பணியற்றி வந்த தந்தை, மகன் இருவருக்கும் நேற்று பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்து எஸ்.ஐ. சண்முகவேல் விசாரிக்க சென்றுள்ளார். அப்போது மதுபோதையில் இருந்த தந்தை, மகன் இருவரும் சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேலை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சண்முகவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றாவளிகள் இருவரையும் 5 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி மணிகண்டனை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். இதையடுத்து மணிகண்டனை விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றபோது உதவி ஆய்வாளர் சரவணகுமாரை தாக்கி விட்டு தப்ப முயன்றபோது போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார். அவரது உடல் உடுமலை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்த உதவி ஆய்வாளர் சரவணகுமார் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.