தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை!
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்றிரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
கடந்த சில நாட்களாகவே சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர் போன்ற மாவட்டங்களில் சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது.
இந்நிலையில், திருவள்ளூவர் மாவட்டம் திருத்தணியில் இரவு முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், சாலையில் ஆறாக ஓடிய கழிவு நீர், மழை தண்ணீரில் கலந்ததால் பொதுமக்கள் கடும் பாதிப்பிற்குள்ளானர். அதைபோல, விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்று பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. விழுப்புரம்,திண்டிவனம், மரக்காணம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்ததால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளகினர்.
இதையும் படியுங்கள் : விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை!
மேலும் மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நாள் முழுவதும் கடுமையான வெயில் வாட்டி வதைத்த வந்த நிலையில் இரவு நேரத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு, லேசானது முதல் மிதமான மழை வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், தேனி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.