திருப்பத்தூர்: மாதனூரில் சூறைக்காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழை!
மாதனூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக சூறைக்காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. அந்த வகையில், பல மாவட்டங்களில் வெயில் சதமடித்து வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 109 முதல் அதிகபட்சமாக 115 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி வந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று பிற்பகல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது.
இந்த நிலையில் மாதனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வடகாத்திப்பட்டி, கூத்தம்பாக்கம், தோட்டாளம், குளிதிகை ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக சூறைக்காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் கோடை வெயிலின் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.