#TirupatiLaddu - திருப்பதி கோயிலுக்கு விரைந்த சிறப்பு விசாரணை குழு : பல குழுக்களாக விசாரணை நடத்த திட்டம்!
திருப்பதி கோயிலில் பிரசாதம் தயாரிக்க மிருகங்களின் கொழுப்பு உபயோகப்படுத்தியது தொடர்பாக பல்வேறு குழுக்கள் அமைத்து விசாரணை நடத்தவுள்ளதாக சிறப்பு விசாரணை குழு தலைவர் சர்வ சிரேஷ்ட திருப்பாட்டி தெரிவித்துள்ளார்.
ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சி காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதங்கள் தயார் செய்வதற்காக மிருகங்களின் கொழுப்புகள் அடங்கிய நெய் திண்டுக்கல்லில் இருந்து அனுப்பப்பட்டது தொடர்பான விவாகரத்தில் விசாரணை நடத்த ஆந்திர அரசு ஐபிஎஸ் அதிகாரி சர்வ சிரேஷ்ட திருப்பாட்டி தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 9 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழுவினர் நேற்று (செப். 28) திருப்பதிக்கு வந்த நிலையில் மாலை தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவை சந்தித்து குழுவினர் பேசினர். அவர்கள் இன்று (செப். 29) காலை திருப்பதி கோயிலில் ஏழுமலையானை வழிபட்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருப்பாட்டி, “திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு எண்470/24 தொடர்பாக விசாரணை நடத்த அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. காவல் நிலையத்திலிருந்து வழக்கு தொடர்பான விவரங்களை பெற்றுக் கொண்டு ஆலோசனை நடத்திய பின் நாங்கள் விசாரணையை துவக்க இருக்கிறோம்.
பல குழுக்களை அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். குறிப்பாக திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர் டெய்ரி நிறுவனத்திடம் இருந்து தேவஸ்தானம் கொள்முதல் செய்த நெய் பற்றி விசாரணை நடத்த இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது” இவ்வாறு தெரிவித்தார்.