#TirupatiLaddu விவகாரம் | நெய் சப்ளை செய்த #ARDairyFood உரிமையாளர் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல்!
திருப்பதியில் லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள் தயார் செய்ய கலப்பட நெய் அனுப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக ஏ.ஆர்.டெய்ரி நிறுவன உரிமையாளர் ராஜசேகர் அமராவதியில் உள்ள ஆந்திர உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில், திருப்பதி தேவஸ்தானத்துக்கு கலப்பட நெய் அனுப்பப்பட்டது குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழுவை ஆந்திர மாநில அரசு நியமித்தது. குண்டூர் ஐஜி சர்வாஷ் ரெஷ்த் திரிபாதி தலைமையில் 9 பேர் கொண்ட குழு விசாரணையை தொடங்கியது. இந்த குழு நேற்று (செப். 29) திருப்பதி கிழக்கு காவல் நிலையத்துக்கு சென்று, திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் கலப்பட நெய் வழங்கியதாக தேவஸ்தானம் கொடுத்த புகாரை வாங்கி பரிசீலித்தது.
இதனை தொடர்ந்து பத்மாவதி விருந்தினர் மாளிகையில், நிர்வாக அதிகாரி சியாமள ராவுடன் கலந்தாலோசனை நடத்தியது. நெய் குறித்த டெண்டர்கள், நெய் வழங்கிய டெய்ரி நிறுவன விவரங்கள், ஏஆர் டெய்ரி குறித்த விவரங்கள், கடந்த ஆட்சியில் நெய் மற்றும் இதர பொருட்கள் வாங்கப்பட்ட விவரங்களை விசாரணை குழு சேகரித்தது.
அந்தக் குழுவினர் தற்போது திருப்பதியில் உள்ள தேவஸ்தான கிடங்கு, திருமலையில் உள்ள தேவஸ்தானத்தின் கிடங்கு, திருப்பதி மலையில் உள்ள ஆய்வகம் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த குழு 3 நாட்கள் வரை திருப்பதியில் விசாரணை நடத்தி, அதன் பின்னர் திண்டுக்கல் ஏஆர் டெய்ரி நிறுவனத்திலும் விசாரணை நடத்த உள்ளது.
இந்நிலையில், ஏ.ஆர்.டெய்ரி உரிமையாளர் ராஜசேகர் அமராவதியில் உள்ள ஆந்திர உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.