#Tirupati லட்டு விவகாரம் - 11 நாட்கள் விரதத்தை தொடங்கினார் பவன் கல்யாண்!
திருப்பதி விவகாரத்தில் புனிதம் கெட்டுவிட்டதாக கூறி அதற்கு பரிகாரமாக 11 நாட்கள் விரதத்தை ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் இன்று தொடங்கினார்.
ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்றது. ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு கலந்திருந்ததாக தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தேசிய அளவில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பா ரெட்டி மறுப்பு தெரிவித்தார்.
லட்டு தயாரிக்க பயன்படுத்தபட்ட நெய்யை ஆய்வகத்துக்கு அனுப்பி, அங்கிருந்து கிடைக்க பெற்ற ஆய்வறிக்கையை தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டது. அதில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாமிச கொழுப்பு , பாமாயில் எண்ணெய் உள்ளிட்டவை கலந்து இருப்பதும் உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார்.
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையானுக்கு 11 நாட்கள் விரதம் இருக்க போவதாக, ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் நேற்று அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலப்படம் செய்தது குறித்து நான் மிகவும் வேதனையடைந்தேன். அனைவருக்கும் இந்த துயரமான தருணத்தில் வலிமை தருமாறு வெங்கடேசப் பெருமாளைப் பிரார்த்திக்கிறேன். இந்த தருணத்தில், நான் கடவுளிடம் மன்னிப்புக் கோரி, பரிகார சபதம் எடுத்து, 11 நாட்கள் விரதம் இருக்க வேண்டும் என்று ஒரு தீர்மானம் எடுக்கிறேன். 11 நாள் பரிகார தீட்சை முடிவில் அக்டோபர் 1, 2-ம் தேதிகளில் திருப்பதி சென்று ஏழுமலையானை நேரில் தரிசனம் செய்து பாவமன்னிப்புக் கோரி, பிறகு இறைவனிடம் பரிகாரத் தீட்சை நிறைவு செய்வேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள் : அண்ணன் திருமணம் ; அமெரிக்காவில் #Samantha - படங்கள் இணையத்தில் வைரல்!
அதன்படி, இன்று ஆந்திராவின் குண்டூர் மாவட்டம் நம்பூரில் உள்ள ஸ்ரீ தசாவதார வெங்கடேஸ்வர சுவாமி கோயிலுக்கு பவன் கல்யாண் வருகை தந்தார். அங்கு நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த பவன் கல்யாண், 11 நாட்கள் விரதத்தை தொடங்கினார். தொடர்ந்து வரும் அக்டோபர் 1, 2 ஆம் தேதிகளில் அவர் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார்.