திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசனம் - 24 மணிநேரம் காத்திருத்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 24 மணி நேரம் காத்திருந்து, பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கோடை விடுமுறை விடப்பட்டதிலிருந்து மக்கள் குடும்பத்துடன் சுற்றுலா தளங்களுக்கும், கோயில்களுக்கும் படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் அனைத்து சுற்றுலா தளங்களிலும் மக்கள் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது. சுற்றுலா தளங்களே இப்படியானால், கோயில் தளங்களை சொல்லவா வேண்டும்.
ஏழுமலையானைத் தரிசிக்க திருமலைக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் செல்வது வழக்கம். மேலும் கோடை விடுமுறை முடிய இன்னும் 15 நாள்களே உள்ள நிலையில் இங்கு பக்தர்களின் கூட்டம் பலமடங்கு அதிகரித்துள்ளது. இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய, 24 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்திற்கு வெளியே ஐந்து கிலோ மீட்டர் நீள
வரிசையில் பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் நீண்ட நேரம் நின்று கொண்டிருப்பதை கருத்தில்கொண்டு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தேவஸ்தான நிர்வாகம் செய்து கொடுத்து வருகிறது.
தேவஸ்தானம் சார்ப்பில் நீர் மோர், உணவுகள் வழங்கப்படுகிறது. அதேபோல், ஆங்காங்கே நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்குத் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.