For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திருப்பதி கோயிலில் நவம்பர் மாத தரிசன டிக்கெட் புக்கிங் - #TTD தேவஸ்தானம் அறிவிப்பு!

06:47 PM Aug 14, 2024 IST | Web Editor
திருப்பதி கோயிலில் நவம்பர் மாத தரிசன டிக்கெட் புக்கிங்    ttd தேவஸ்தானம் அறிவிப்பு
Advertisement

திருப்பதியில் நவம்பர் மாதம் சாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிடும் தேதியை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Advertisement

உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்வதற்காக வந்து செல்கின்றனர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அதிலும் குறிப்பாக, வார இறுதி நாட்கள், பண்டிகைக் காலங்களில் திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இங்குவரும் பக்தர்கள் தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றை காணிக்கையாகச் செலுத்துவது வழக்கம்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் சிறப்பு தரிசன டிக்கெட் உள்ளிட்ட பிற சேவைகளுக்கான டிக்கெட்டுகளை எப்போது முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என்பதை 90 நாட்களுக்கு முன்னதாகவே தேவஸ்தானம் அறிவிப்பது வழக்கம். அதன்படி, நவம்பர் மாதம் சாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிடும் தேதியை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும், தங்குமிடம், தன்னார்வ சேவைக்கான ஆன்லைன் ஒதுக்கீட்டையும் வெளியிடவுள்ளது. அதன்படி, நவம்பர் மாதத்துக்கான இணையதள முன்பதிவு ஆகஸ்ட் 19-ம் தேதி வெளியிடவுள்ளது.

மேலும், சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உள்ளிட்ட சேவைகளுக்கான மின்னணு டிக்கெட்டுகளுக்கு ஆக.19-ம் தேதி காலை 10 மணி முதல் 21-ம் தேதி காலை 10 மணி வரை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ஹர தீப அலங்கார சேவைகளுக்கான டிக்கெட்டுகள் மற்றும் நவம்பர் 9-ம் தேதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் புஷ்பயாகம் சேவை டிக்கெட்டுகள் ஆக. 22-ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

மெய்நிகர் சேவை டிக்கெட்டுகள் ஆக.22 மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான டோக்கன்கள் வரும் 23-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். ஸ்ரீவாணி அறக்கட்டளை முன்பதிவு டிக்கெட்டுகள் 23-ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. முதியோர், மாற்றுத் திறனாளிகள் போன்றவர்களுக்கான டிக்கெட்டுகள் 23-ம் தேதி மாலை 3 மணிக்கும், நவம்பர் மாத சிறப்பு விரைவு தரிசன 300 ரூபாய் டிக்கெட்டுகள் 24-ம் தேதி காலை 10 மணிக்கும் வெளியிடப்படும்.

அதேபோல, திருமலை மற்றும் திருப்பதியில் அறைகள் ஒதுக்கீடு முன்பதிவுக்கான டிக்கெட் 24-ம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். ஆகஸ்ட் 27-ம் தேதி திருமலை - திருப்பதி ஸ்ரீவாரி சேவை ஒதுக்கீடு காலை 11 மணிக்கும், நவநீத சேவை மதியம் 12 மணிக்கும், பரகாமணி சேவை மதியம் 1 மணிக்கும் ஆன்லைனில் வெளியிடப்படும். பக்தர்கள் ttdevasthanams.ap.gov.in தேவஸ்தான என்ற இணையதளம் மூலம் ஆர்ஜித சேவைகள், தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement