#TirumalaBrahmotsavam : பெரிய சேஷ வாகன உலாவை கண்டுகளித்த பக்தர்கள்!
புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர நவராத்திரி பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர நவராத்திரி பிரம்மோற்சவ விழா, நேற்று (அக். 4) மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி, சமேதராய் மலையப்பர், விஸ்வக்சேனர் ஆகியோர் தங்க கொடிமரம் வரை கொண்டு வரப்பட்டனர். அப்போது மேள தாளங்கள் முழங்க, வேத பண்டிதர்கள் வேதங்கள் ஓத, கருடன் சின்னம் பொறித்த கொடி, கொடி மரத்தில் ஏற்றப்பட்டது.
வருடாந்திர பிரம்மோற்சவத்தின் முதல் நாளான நேற்று இரவு, ஸ்ரீதேவி, பூதேவி, சமேத மலையப்ப சாமியின் பெரிய சேஷ வாகன புறப்பாடு நிகழ்வு கோயில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது. பெரிய சேஷ வாகன புறப்பாட்டை முன்னிட்டு, கோயிலில் இருந்து உபய நாச்சியார்கள் சமேதராக புறப்பட்ட மலையப்ப சுவாமி வாகன மண்டபத்தை அடைந்தார்.
அங்கு பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர்களுக்கு சமர்ப்பணம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கு இடையே, கோயில் மாட வீதிகளில்
ஏழுமலையானின் பெரியசேஷ வாகன புறப்பாடு கோலாகலமாக நடைபெற்றது. இதனை மாட வீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு வழிபாடு மேற்கொண்டனர்.