#Tirupati லட்டு விவகாரம் - கோயிலுக்கு ஏற்பட்ட தோஷத்தை போக்க யாகம்!
திருப்பதியில் லட்டு சர்ச்சையை அடுத்து, பக்தர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் ‘சாந்தி யாகம்’ தொடங்கியது.
ஆந்திர மாநிலம் அமராவதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நெய் கலப்படம் செய்யப்பட்டதாக கூறப்படும் ஏ.ஆர்.பால் பண்ணையில் இருந்து வந்த நான்கு டேங்கர் நெய் திருப்பி அனுப்பப்பட்டது. ஆனால் அதற்கு முன்பு வந்த 6 டேங்கர் நெய் சுவாமிக்கு பிரசாதம் தயார் செய்து பயன்படுத்தப்பட்டதால் அந்த தோஷத்திற்கு பரிகாரம் செய்வது குறித்து ஆகம ஆலோசகர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது. அதன்படி 23-09-2024 (இன்று) காலை 6 மணி முதல் 10 மணி வரை கோயிலில் உள்ள தங்க கிணறு அருகே உள்ள மண்டபத்தில் சிறப்பு தோஷ நிவர்த்தி சாந்தி யாகம் மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சிறப்பு புலனாய்வு விசாரணை வேண்டும் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் லட்டுகள் தயாரிக்க பயன்படுத்தும் நெய்யில் விலங்குகள் கொழுப்பு பயன்படுத்திய விவகாரம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட கோரி இந்து சேனா அமைப்பின் தலைவரும், விவசாயியுமான சுர்ஜித் சிங் யாதவ் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், “பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டுகளில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தியது இந்து மதத்தை அவமதித்துள்ளது, புண்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.