மரக்கடையில் திடீர் தீ விபத்து: பல மணி நேரம் போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி புதூர் பகுதி மரக்கடை ஒன்றில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 20லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த கொடையாஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் பிரான்ஸ். இவருக்கு சொந்தமாக புதூர் அண்ணாநகர் பகுதியில் மூன்று மாடி அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.
இதன் கீழ் தளத்தில் பிரான்ஸ் சொந்தமாக மரக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று காலையில் திடீரென இந்த மரக்கடையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதனைப் பார்த்த இப்பகுதி மக்கள் உடனடியாக வாணியம்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் முதற்கட்டமாக குடியிருப்பில் வசித்து வந்த பத்திற்கும் மேற்பட்டோரை வெளியேற்றினர்.
தீயை கட்டுக்குள் கொண்டுவர முயன்றும் பலனளிக்காததால் ஆம்பூர், நாட்றம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டது.
சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போராடி பற்றி எரிந்த தீயை வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். சம்பவ இடத்திற்கு நேரில் வந்த வாணியம்பாடி வட்டாச்சியர் மோகன் விசாரணை நடத்தினார்.
மேலும் இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேந்தன்